Skip to main content

1146 results found

தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
தஞ்சாவூர் அருமொழிதேவ வளநாட்டு, திருநறையூர் நாட்டு ஸ்ரீமாகேஸ்வரத்தானம் சீசிவபாதசேகரமங்கலத்து தபஸி திருச்சிற்றம்பலமுடையான் இராரா தேவநாந இராசேந்திரசிங்க பிச்சன் என்பவன் தனது தந்தை குலோத்துங்க சோழப் பிச்சர் முன்னரே எழுதிக் கொடுத்திருந்த ஒரு பிரமாணப் பத்திரம் தொடர்பாக மீண்டும் புனப் பிரமாணம் என்ற பெயரில் [மீண்டும் எழுதுகிற பிரமாணப்பத்திரம்) புதிய பிரமாணப்பத்திரம் பண்ணிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எழுதிக்கொடுத்த பத்திரம் [சாதனம்] ஏதோ காரணத்தினால் இல்லாது போய்விட்டதால் மீண்டும் அவரது மகனால் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பத்திரம் கோயில் திருமுற்றம், சிவபிராமணர்க்கு மனைக்குடியிருப்பு, இறைவனுக்கு திருவமுது, திருவிளக்கு தொடர்பாக கொடுத்த நத்தம், விளைநிலம் தொடர்பானது எனத் தெரிகிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
தஞ்சாவூர் மிகவும் சிதைந்த கல்வெட்டு. மன்னனின் பெயர் சிதைந்துள்ளது. ஜீவிதமாக நிலமளித்த செய்தியும், திருக்காமக் கோட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னனது ஆணையின்படி திருக்காமக்கோட்டமுடைய இறைவிக்கு நிவந்தம் அளிக்கப்பட்டிருக்கலாம்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
தஞ்சாவூர் கல்வெட்டு சீராக இல்லாமல் கற்கள் ஆங்காங்கே மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு வேண்டிய திருவமுது படைப்பதற்காக நிலம் நிவந்தமளித்த செய்தியைக் கூறுவதாக இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
தஞ்சாவூர் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறைவனை பிரதிட்டை பண்ணி, பலரிடத்திலும் நிலம் விலைக்கு வாங்கி கொடையளித்த செய்தியைக் கூறுவனவாக இருக்கலாம்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>உடையாளூர்
தஞ்சாவூர் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. மாகேஸ்வரத்தானமாகிய சிவபாதசேகரமங்கலத்து தபஸி தில்லைக் கூத்தனான ஈசான சிவ.... என்பவன் இக்கோயில் இறைவனுக்கு அமுது படைப்பதற்காக நிலக்கொடையளித்த செய்தியைக் கூறுவதாகத் தெரிகிறது. பெரிய நாயனார் ராஜாதிராஜதேவர் காலத்தில் அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. மிகவும் சிதைந்துள்ளதால் முழு செய்தியையும் அறியமுடியவில்லை.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>மருத்துவக்குடி
தஞ்சாவூர் திருவிடைக்குளமுடைய மகாதேவர்க் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட கொடை பற்றித் தெரிவிக்கிறது. இறைவனுக்கு அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு இக்கொடை அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>மருத்துவக்குடி
தஞ்சாவூர் இருவேறு சதுர்வேதி மங்கலங்களிலிருந்து சில நிலங்களைப் பிரித்து செம்பியன் நெற்குப்பை என்ற பெயரில் திருநாமத்துக்காணியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மன்னனின் 21-ஆவது ஆட்சியாண்டு முதல் அந்நிலம் தேவதான இறையிலியாக்கப்பட்டது. மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆண்ட பெரிய தேவர் திரிபுவந தேவரின் 40-வது ஆட்சியாண்டு வரை உள்ள காலத்திற்கு வரிக்கணக்கிட்டு வசூலிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>மருத்துவக்குடி
தஞ்சாவூர் ஆனைச்சூழ் திருவிடைக்குளமுடையார்க்கு கல்வெட்டு எண் 1-2ல் போன்று தேவதான இறையிலியாக சில நிலங்கள் கொடுக்கப்பட்ட செய்தியும், திரிபுவன வீரதேவரின் (மூன்றாம் குலோத்துங்கன்) 40-ஆவது ஆட்சியாண்டு வரை தண்ட திருவாய்மொழிந்தருளியதால் (ஆணைப் பிறப்பித்ததால்] நானூற்று எழுபத்தாறு கல நெல் அந்தராயமாக வசூலிக்கப்பட்ட செய்தியும் புரவுவரி [வருவாய்த்துறை] அதிகாரிகள் பலரும் பிற அதிகாரிகள் சிலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>மருத்துவக்குடி
தஞ்சாவூர் ஆனைச்சூழ் உடையார் திருவிடைக்குளமுடையார்க்கு தேவதான இறையிலியாக சில நிலங்கள் கொடுக்கப்பட்டன. அந்நிலங்கள் சில சதுர்வேதி மங்கலங்களோடு சேர்ந்திருந்த நிலங்களில் இருந்து பிரிக்கப் பட்டவையாகும். இந்த நிலத்திற்கு அந்தராயம் போன்ற காணிக்கடன் செலுத்துவதற்கும் வேலி ஒன்றுக்குப் பதின்கலம் நெல்லு தரப்பட்டிருந்தது. கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும் என இந்தியக்கல்வெட்டு ஆண்டறிக்கைத் தெரிவிக்கிறது.
தஞ்சாவூர்>திருவிடைமருதூர்>மருத்துவக்குடி
தஞ்சாவூர் ஆனைச்சூழ் உடையார் திருவிடைக்குளமுடையார்க்கு வேண்டும் நிவந்தங்களுக்காக பல சதுர்வேதி மங்கலங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்து மொத்தம் பதினொன் ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே மாகாணிநிலம் 21-ஆவது பசான முதல் தேவதான இறையிலியாக, இந்நிலத்திற்கு இறை கட்டுவதற்குச் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. இந்நிவந்தத்தை வரியிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத, திருமந்திர ஓலை மீனவன் மூவேந்த வேளான் நிவந்தம் பண்ணுக என்று மன்னனின் ஆணையை நிறைவேற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் ஒவ்வொரு வரியிலும் இறுதியில் சில சொற்கள் சிதைந்துள்ளன. இறுதியில் சில வரிகள் காணப்படவில்லை. திருநாகீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்துவதற்காக பாழாய் கிடந்த நிலம் திருத்தித்தரப்பட்ட செய்தியைக் கூறுவனவாக இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூர் நாட்டு குடமூக்கிலுள்ள திருநாகீசுரமுடைய மகாதேவர் கோயிலுக்கு அதே வளநாட்டு வெண்ணாட்டு கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நாரக்கண் கிருஷ்ணன் ராமன் என்ற அதிகாரி நிலக்கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.* மேலும் அரசியார் ஒருவர் இக்கோயில் இறைவனுக்கு தினந்தோறும் தும்பைப்பூ திருப்பள்ளித்தாமம் சாத்துவதற்கு நிலக்கொடையளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இவர் முதலாம் ராஜாதிராஜசோழனின் அரசியாராக இருத்தல் வேண்டும்.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதம் என்ற ஊரைச் சேர்ந்த மாணிக்கன் மாவலியாகிய விக்கிரமசிங்க பல்லவரையன் 100 காசுகளை திருகுடமூக்கு மூலபருடை சபையாரிடம் அளித்து, வெள்ளத்தால் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுகின்ற போது அதை சரிப்படுத்துவதற்கும், இறைவனுக்கு திருவமிர்து படைக்கவும், அக்கோயிலில் உள்ள திருச்சிற்றம்பலமுடையான் என்ற மண்டபத்தில் சிவதர்மம் வாசிக்கவும் ஏற்பாடு செய்தமைத் தெரியவருகிறது. அக்காசுகள் 100-க்கும் 1 காசுக்கு ஒரு கலம் நெல் வீதம் வட்டி வசூலிக்கப் பட்டு அதிலிருந்து மேற்கூறிய செலவினங்களுக்குப் பயன்படுத்தப் பட்டமையும் கூறப்பட்டுள்ளது.*
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் கல்வெட்டு எண்கள் 5-லும் 6-லும் கூறப்பட்டுள்ள அதே பாணப்பெருந் தேவியார், ஸ்ரீ நாகீஸ்வரமுடையார்க் கோயிலில் அமர சுந்தரதேவர் என்ற இறைவனை எழுந்தருளுவித்து அவருக்கு சிறுகாலை சந்திக்கு படைக்க வேண்டிய திருவமுது, விளக்குகள் இரண்டு, உச்சியம்போதில் படைக்க வேண்டிய திருவமுது, விளக்குகள், இரவில் படைக்க வேண்டிய திருவமுது, திருவிளக்குகள் ஆகியவற்றிற்கு நிவந்தம் அளித்த செய்தி கூறப் பட்டிருக்கிறது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் நிலவிற்பனை பற்றிக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. தென்கரை திரைமூர் நாட்டு தேவதானம் திருவிண்ணகர் திருநாகீஸ்வரமுடையார்க்கு ஒன்றரை வேலி நிலம் விற்கப்பட்டது. இந்நிலத்தை விற்றவர்கள் திருநரையூர் நாட்டு பிரமதேயம் மஹாதான மங்கலமாகிய பாரதாயன் குடி சபையோர் ஆவர். இவர்கள் நிலத்திற்கு விலையாக பொன்னைப் பெற்றுக்கொண்டு இறையிலியாக விற்றுக்கொடுத்தனர். இந்த விற்பனை அறிஞ்சிகைப் பிராட்டியாரான ஸ்ரீவாணப்பெருந்தேவியார் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலம் கோயிலுக்கு திருவிழா நடத்துவதற்கும் பருப்பு போனகத்திற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருநாகேஸ்வரம்
தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் உடைய மகாதேவர் திருவாபரணங்களின் பட்டியலைக் கல்லில் வெட்டவேண்டும் என்று பணிமகன் கண்டன் கோவலநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கல்வெட்டு வெட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் அவற்றின் எடை பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருப்பள்ளித்தாமத்திற்கு உரிய பொற்றாமரைப் பூக்கள், ஸ்ரீபலி எழுந்தருளுகின்ற உய்யக்கொண்டார் எனும் இறைவனுக்கு சாத்துவதற்குரிய பொற்பூக்கள் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன. பிற்பகுதி பெரிதும் சிதைந்து விட்டது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் கல்வெட்டின் இறுதியில் சில வரிகள் பூமிக்குள் மறைந்துவிட்டன.செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம் நாலூர் பட்டப்பெருமக்கள் உள்ளிட்ட மகாசபைப் பெருங்குறிப் பெருமக்கள் 521 குழி நிலத்தை 5 கழஞ்சு பொன்னுக்கு இவ்வூர் வியாபாரி அடியூருடையான் நாரணன் தத்தன் என்பவனுக்கு விற்றுக் கொடுத்த செய்தியும், அவ்வியாபாரி நிலத்தை இறையிலி செய்து திருமயானதேவர்க் கோயிலுக்கு நிவந்தமாக அளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இந்நிலத்திற்கு எல்லைகள் கூறப்படும்போது திருப்பாற்கடல் தேவர் நிலமும், பிடாரியார் நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் சில இடங்களில் சிதைந்து காணப்படுகிறது. திருநறையூர் நாட்டு பிரம்மதேயம் ஆரூர்ச்சேரி பெருங்குறிப் பெருமக்கள் கமுகந் தோட்டத்தை 40 கழஞ்சு பொன்னுக்கும், நீர் நிலத்தை 13 கழஞ்சு பொன்னுக்கும் நாலூர் திருமயானத்துத் தேவர் கோயிலுக்கு இறையிலியாக விற்பனை செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. விற்பனை செய்த கமுகந் தோட்டத் திற்கு எல்லைகள் கூறும்போது இவ்வூர் சம்பரேஸ்வரர் கோயில் கமுகந் தோட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் செற்றூர்க் கூற்றத்துப் பிரமதேயம் நாலூர் நம்பிமார் உள்ளிட்ட மகாசபைப் பெருங்குறி பெருமக்கள், இவ்வூர் திருமயானத்துப் பரமஸ்வாமி கோயிலுக்கு பதின்மூன்று பழமரபுக் காசுகளைப் பெற்றுக்கொண்டு இறையிலியாக நில விற்பனை செய்து கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருமெய்ஞானம்
தஞ்சாவூர் நாலூர் சம்பரீஸ்வரத்து பெருமானடிகள் கோயில் சண்டேஸ்வரரிடமிருந்து முன்னர் காசுகள் பெற்றுக்கொண்ட நாலூர் சபையார் குறிப்பிட்ட ஒரு நிலத்திற்கு இறையிலி செய்து கொடுத்த செய்தியும் நிலத்திற்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.