54 results found
தஞ்சாவூர்>திருத்துறைப்பூண்டி>திருத்தெங்கூர்
மூதலில் இக்கோயில் உடையாரின் தேவதான இருவிளக்குப்புற நிலத்தினைத் திருத்தெங்கூர் வியாபாரிகள் விலைக்கு வாங்கி, திருத்தெங்கூர் போயனுக்கு வேட்டைப் பேருக வழங்கியிருந்தனர். தற்போது, தாம் வேறு நிலம் கொடுக்க எண்ணியதால், முதலில் வாங்கிய நிலத்தினையும், அதற்கெனத் தாம் கொடுத்த காசு ஐம்பதையும் கோயிலுக்கே திருநாமத்துக் காணியாக அளிக்கின்றனர். இந்தக் கொடை தருவதால், அவ்வியாபாரிகள் தரவேண்டிய எண்ணெய் வரியின்று விலக்களிக்கப்படுகறது. இதனைக் கோயில் ஸ்ரீகார்யம் செய்வார், ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணிகள், தேவகன்மி, கோயிற்கணக்கர் ஆகியோரே செய்து தருகின்றனர், அவர்களின் பெயர்களும் காணப்படுகின்றன.தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- திருக்கோடிகா உடையார் கோயில் தேவகன்மிகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் மனுவூருடையார் வலந்தரும் கூத்தப் பெருமாளுக்கு எழுதிக்கொடுத்த பிரமாண இசைவுத் தீட்டு இது. தியாக வினோத விழுப்பரையரின் காணியான அரைமாவும், இவரது குருவான வலந்தரும் கூத்தப்பெருமாளுக்குக் கொடையாகக் கொடுத்த நிலம் அரைமாவும் ஆக ஒருமா நிலம் இறையிலி செய்து கொடுக்கப் பட்டது.இந்நிலம் இறையிலி செய்து கொடுத்ததற்கு மாற்றாக, இக்கோயிலின் தேவதானம் கண்ணமங்கலத்திலுள்ள இரண்டு மா நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக்கி, அதிலிருந்து வரும் நெல்லினைப் பண்டாரத்தில் அளக்க வேண்டும் எனவும், அந்நிலத்தினைத் திருநாமத்துக் காணியாக அளிக்க வேண்டுமெனவும் இக்கோயில் தானத்தாரும், மாஹேஸ்வரரும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இது அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. மேலும் திருக்கோடிக்காவுடையார் கோயில் திருப்பணிக்கு 150 காசு கொடுக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம். வலந்தரும் கூத்தப் பெருமாள் ஒரு குரு என்பதையும், அவர் இத்திருக்கோடி காவுடையார் கோயிலில் குருஸ்தானமாகத் திருப்பெருந்துறை ஆளுடையாரை எழுந்தருளுவித்தார் என்ற செய்தியையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கோயில் கணக்கர், தேவகன்மி, ஸ்ரீகார்யம், சைவாச்சார்யர், மாஹேஸ்வரக் கண்காணி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கல்வெட்டு இடையிடையே பெரிதும் சிதைந்து விட்டதால் தெளிவாகத் தொடர்ச்சியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.
தஞ்சாவூர்>கும்பகோணம்>திருக்கோடிக்கா
- கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது. இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்துள்ள பகுதியிலிருந்து, பல்லவராசன். என்ற அதிகாரியின் விண்ணப்பத்தின்படி குலோத்துங்கன் விடுத்த ஆணையொன்றை இக்கல்வெட்டுக் குறிப்பதாகத் தெரிகிறது. இவ்வாணை, இக்கோயில் தேவகன்மிகளுக்கும், மகேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.இக்கோயில் இருக்கும் விருதராச பயங்கர வளநாட்டுக்கு நீர்பாய்வதற்காக முன்பு பழைய குறுக்கை வாய்க்கால் என்ற ஒரு வாய்க்கால் தோற்றுவிக்கப் பட்டது. அப்போது இக்கோயிலுக்குரிய தேவதான நிலப்பகுதிகளிலும் அவ் வாய்க்கால் தோண்டப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் இராசேந்திரச் சோழச் சதுர்வேதி மங்கலத்தின் கிழக்கே கடுவன் வாய்க்காலென்ற ஒரு வாய்க்கால் புதிதாக அமைக்கப்பட்டு விட்டதால், (முன்னது பயன்படவில்லை போலும்) முதலில் தோண்டப்பட்ட தேவதான நிலப்பகுதிகளை மீண்டும் தூர்த்துக் கோயிலுக்கே அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டதாகத் தெரிகிறது.