Skip to main content

1146 results found

காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>இடையார்பாக்கம்
காஞ்சிபுரம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து புரிசை நாட்டு இடையாற்றுபாக்கம் என்னும் ராஜவிச்சாதிர சதுர்வேதி மங்கலத்து இறைவன் திருப்படக்காடுடையார்க்கு விளக்கு வைக்க, இவ்வூரைச் சார்ந்த அருளாளபட்டன் மகள் ஆண்டமைச் சாநி என்கிற பிராமணப் பெண் முப்பது காசுகள் புரிசை ஊரார் வசம் கொடுத்து, நிலம் ஒன்றினை வாங்கி திருநந்தா விளக்குப் பட்டியாக அளித்து 34 விளக்கெரிக்க தானமளித்துள்ளாள்.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் கன்றூர் நாட்டு சோழவிச்சாதிர சதுர்வேதி மங்கலத்து சபையார், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மனையிற் கோட்டத்துப் புரிசை நாட்டு உரோகடத்து ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க் கோயிலுக்கு நிலம் ஒன்றினை இறையிலி தேவதானமாக பத்து இராசராசன் காசு பெற்றுக்கொண்டு நிலவிலையாவனம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலத்தினைப் பெற்ற இவ்வூர் உண்ணாழிகை சபையார் இறைவனுக்கு அமுது படைக்கும்போது சிவயோகி ஒருவருக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் சோமன் குமரனான மதுராந்தக மாராயர் என்பவர், பாசாலி நாட்டு பாசாலி வீரன் உத்தமசோழன் கங்கை கொண்டார் என்பவரிடம் முப்பது காசுகளைக் கொடுத்து, காசு ஒன்றுக்கு ஒராண்டுக்கு வட்டி ராஜகேசரி என்னும் மரக்காலால் பதக்கு வீதம், முப்பது காசுகளுக்கு வட்டியாக வந்த ஐங்கல நெல்லை, சிவபுரத்து கோயிலில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருவேட்டைத் திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற போது பெருந்திருவமிர்து படைப்பதற்காகக் கொடையளித்துள்ளார்.
அக்கொடை மூலம் அரிசி ஒரு கலம், நெய் இருநாழி, எண்ணை இரு நாழி, தயிர் பதக்கு, கறியமுது நான்கு, மிளகு உழக்கு, கடுகு உழக்கு, சர்க்கரை நாழி, விறகிடுவானுக்குத் தரப்படும் செலவு ஆகியவற்றிற்கு மேற்குறிப்பிட்ட ஐங்கலம் நேர் ஆனது பற்றியும் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நெல் தேவைப்பட்டது என்ற விவரமும் தரப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் கல்வெட்டு முழுமையாக இல்லை. உரோடகத்து ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் உள்ள திரிபுரவிஜயரான சிவபுரச் செல்வர் மற்றும் இறைவி நம்பிராட்டியார் திருமேனிகளுக்கு தினமும் ஒவ்வொரு சந்தியின் போதும் திருவமிர்து, கறியமுது, நெய், தயிர், அடைக்காய் போன்றவை வைத்து வழிபாடு செய்வதற்காக நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கடவூர் அரிந்தம நல்லூருடையான் நீலன் வெண் காடன் என்பவன் இக்கோயிலுக்குக் கொடுத்த பொன் துளைநிறை காசுகளை கழஞ்சாக மாற்றும் போது வந்த பொன் இருபத்தஞ்சு கழஞ்சு. இப்பொன்னுக்கு வைகாசி மாதம் முதல் ஓராண்டுக்கு ஒரு கழஞ்சுக்கு வட்டியாக ஒரு மாதத்திற்கு மஞ்சாடி பொன் நிறையுள்ள காசுகள் வீதம் 25 கழஞ்சுக்கு வட்டியாக வந்த பொன் 15 கழஞ்சு. இப்பொறுப்பை ஏற்றுக் கொண்ட சிலர் இப்பொன் கொண்டு ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு நிலம் விலைக்கு வாங்கினர். இந்நிலத்திற்கு கட்ட வேண்டிய வரிகளையும், முதலாகச் செலுத்தப்பட்ட 25 கழஞ்சு பொன்னுக்கு வரியையும் தாங்களே செலுத்துவதாகக் கூறி, இந்நிலத்திற்கு நீர்பாய்ச்சும் உரிமைகள் பலவற்றையும் வரையறுத்துக் கூறி கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலம் ஸ்வாமி போகமாக அளிக்கபட்டதால் அந்நிலத்திலிருந்து வரும் நெல்லு ஆண்டுக்கு நூற்றெண்பத்தேழு கலனே இரு தூணிப் பதக்கு. இந்நெல் கொண்டு கோயிலுக்கு செய்யும் நிவந்தம் கூறப்பட்டுள்ளது.
(1) இறைவனுக்கு உச்சியம்போதில் [மதியம்] அமுது படைக்கின்ற போது பக்கத்தில் திருச்சுற்று மாளிகையிலே உத்தமாக்கிரமமாக வேதம் ஓதும் பிராமணர் ஐவருக்கு ஒருவருக்கு அரிசி இருநாழி வீதம் ஐவருக்கும் நெல்லும், நெய்யும் புழுக்குக்கறி, மிளகுப்பொடி கலந்த கறி, மரக்கறி மூன்று, மிளகு, உப்பு, தயிர், பாக்கு வெற்றிலை, விறகு, ஐந்து இலையிட்டு உண்ணும் பிராமணன் ஒருவருக்கும் நெல்லு, புடவை முதல் ஆகியனவற்றிற்கு ஒருவர்க்கு ஆகும் செலவு வீதம் ஐவர்க்கு ஆகும் செலவுகள் மேற்கூறிய ஒவ்வொன்றுக்கும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அறுதியிட்டு கூறிய பின் கோயில் ஸ்ரீகாரியம் பார்ப்பார், உண்ணாழிகை உடையார் சிவ பண்டாரிகள், தேவகன்மிகள் ஆகியோர் கல்லில் வெட்டுவித்தனர்.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்து ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவர் என்ற இறைவனுக்கு திருநந்தா விளக்கு இரண்டு எரிப்பதற்கு மன்னர் முதலாம் இராஜேந்திர சோழ தேவரே 180 ஆடுகள் கொடையளித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் முதலாம் இராஜாதிராஜன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசைநாட்டு சிவபுரத்து ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடையார்க் கோயிலில் ஆதித்த வாரம் (ஞாயிறு)தோறும் இறைவனை ஆதித்த வாரப் பெரும்பலி எழுந்தருளச் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டிருந்த பழந்தேவதானம் துப்புரவு பத்து என்ற நிலத்திலிருந்து காணிக்கடனாக ராஜகேசரி என்ற அளவால் நெல்லு முப்பத்துநாற்கலம் பெறப்பட்டு வந்தது. இதற்கு காலளவு பறி கூறியாக ஒவ்வொரு கலநெல்லுக்கும் முன்னாழி உரி நெல் வாசியாக ஏற்றி முப்பத்தைந்து கலநே பதக்கு எழுநாழி நெல் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதிலிருந்து,
(1) கனியமுதுக்கும் திருவமுதுக்கும் ஓராண்டுக்கு முக்கலநே முக்குறுணியும்
(2) திருவாராதனை செய்வார், திருஉண்ணாழிகை உடையார், மாணிகள் அறுவர், பதியார் 24 பேர், பஞ்சாசாரியர், வீணை வாசிப்பான், உடுக்கை வாசிப்பான், திருப்பதியம் பாடுவான், திருவாய்க் கேழ்வி உடையான், பாடவியன் உள்ளிட்ட உவச்சர் பதின்மர், கவரி பிணாக்கள் 12பேர், திருப்பள்ளித் தொங்கலிடுவார் நால்வர், கணக்கன், பண்டாரி, திருமெய்காப்பார் நால்வர், திருப்பள்ளித் தாமம் பறித்துக் தொடுப்பான்- ஆகியோருக்கு ஒருபங்குக்கு பதக்கு நெல் வீதம் 55 பங்குக்கு ஓராண்டுக்கு 29 கலனே தூணிக்குறுணி நாநாழியும்
(3) விளக்குப் பிடிப்பார் நால்வர், கொடிப்பிடிப்பார் நால்வர், ஆகியோருக்கு நெல்லு இருகலன்
ஆகமொத்தம் முப்பத்தைந்து கலன் பதக்கு ஏழுநாழி நெல் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது இக்கல்வெட்டு. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்துக் கன்றூர் நாட்டு கூவமான மதுராந்தக நல்லூர் உடன் சேர்ந்த சிற்றரையர் பூதூரான ஸ்ரீமதுராந்தக சேரியிலுள்ள ஏரிக்கு பாலாற்றிலிருந்து நீர் பாய்கிற வாய்க்காலை இவ்வூர் ஸ்ரீராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவற்கு இறையிலி தேவதானமாகக் கொடையளித்து ஊரார்கள் கல்லில் வெட்டுவித்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>ஸ்ரீ பெரும்புதூர்>சிவபுரம்
காஞ்சிபுரம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து புரிசைநாட்டு உரோடகத்து ஊரார்கள், இவ்வூர் ராஜராஜ ஈஸ்வரமுடைய மஹாதேவற்க்கு இறையிலி தேவதானமாக முன்னர் கொடையளித்த நிலம் நீக்கி மற்றோர் நிலத்தை இறையிலி தேவதானமாக விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. முன்னர் கொடையளித்த நிலத்தின் எல்லைகளும் அப்போது விற்ற நிலத்திற்கு எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்த சாசனத்தை ஊரார் சொல்ல எழுதியவர் வைகானஸன் கேசவ சங்கர நாராயணன் ஆவார்.
தென்காசி>சங்கரன் கோவில்>சங்கரன் கோயில்
தென்காசி இத்தூணின் மேற்பகுதியில் இரட்டை நாகத்தின் கீழ்லிங்கம் இருப்பது போன்று சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மன்னனால் வழங்கப்பட்ட இறையிலி தேவதான நிலமாக இத்தன்னூத்தானேந்தல் நீர் பாயும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இதிலிருந்து வருகின்ற வருவாயைக் கொண்டு இக்கோயில் இறைவர்க்கு அர்த்தசாம பூசை, வரகுணராமன் பிறந்த மூலநட்சத்திரத்தில் பூசை ஆகியன நடத்தப்பட்டன.
தூத்துக்குடி>திருச்செந்தூர்>வீர்பாண்டியன் பட்டினம்
தூத்துக்குடி மன்னன் உதைய மார்த்தாண்டன் சோணாடு கொண்டான் பட்டினத்தில் ஏறுகிற இறங்குகிற சரக்கின் மதிப்பில் நூறு பணத்திற்குக் கால் பணம் இப்பள்ளிவாசலுக்குத் தானமாக கொடுத்துளிளான். மேலும் இப்பள்ளிவாசலுக்கும் இறைப்பணி செய்யும்காதியார்க்கும் தன்பெயரைச் சூட்டி உதைய மார்த்தாண்டப் பெரும்பள்ளியென்றும் உதைய மார்த்தாண்ட காதியார் என்றும் விளங்கச் செய்துள்ளதை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
பெரம்பலூர்>குன்னம்>துணிஞ்சிபாடி
பெரம்பலூர் தனஞ்சிப்பாடி கிராமம் முழுவதும் வெண்மணி மருதாந்த சோழீசுவரமுடையார் கோயிலுக்கு சர்வமானிய இறையிலியாக ஸ்ரீரங்கதேவ மகாராயரின் காரிய கர்த்தரான கொண்டம நாயக்கரின் தர்மமாக கிருஷ்ணப்ப மகாராயரால் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர்>வேப்பந்தட்டை>திருவாலந்துறை
பெரம்பலூர் திருஆலந்துறையுறை நாயனார் சித்திரைத் திருநாள் நடந்தபோது, அரசனின் அத்தாணிமண்டபத்தின் தலைவாசல் வழியாக ஒரு பாம்பு புகுந்து விட்டது. உடனே அரசன் அங்குள்ள பட்டர்களை அழைத்து இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்று கேட்க, அதற்கு அவர்கள் இங்குள்ள இறைவனுக்கும் மாகேசுவரருக்கும் சில தேவதானமும் பூமிதானமும் பண்ண வேண்டுமென்று கூற, அதன்படி 200 குழி நிலம் நாட்டார்கள் இறையிலியாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
பெரம்பலூர்>குன்னம்>சித்தளி
பெரம்பலூர் வீரசோமீஸ்வரனின் தளபதி ஹரிகர தண்டநாயக்கர் என்பவர் 46 வேலி நிலம் இறையிலியாக சிற்றகழி தேவண்ண விண்ணகர் எம்பெருமான் கோயிலுக்கும், தேவண்ணச் சதுர்வேதி மங்கலத்து பட்டர்களுக்கும் வழங்கிய செய்தியைக் கூறுகிறது.
பெரம்பலூர்>ஆலத்தூர்>குளத்தூர்
பெரம்பலூர் எழுத்துக்கள் தேய்ந்துவிட்டன. பிரமதேயத் தம்பிரான் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் இறைவனுக்கு திருநாமத்துக் காணியாக தானம் செய்ததைப் பற்றிக் கூறுகிறது.
பெரம்பலூர்>குன்னம்>கோயில்பாளையம்
பெரம்பலூர் முடிகொண்ட சோழ வளநாட்டுக் காரைக்காட்டுத் துண்ட(நாட்டு) தேனூர் வரசரித ஈஸ்வரருடையாற்கு, இறையிலியாக விட்ட செய்தியும் சில வரிகள் வசூலித்துக் கொள்ள வழங்கப்பட்ட உரிமைகள் பற்றியும் கூறுகிறது. இக்கல்வெட்டு மூலம் 20 மா என்னும் பொன் ஒரு மாடைக்குச் சமம் எனத் தெரிகிறது.
பெரம்பலூர்>வேப்பந்தட்டை>வெண்பாவூர்
பெரம்பலூர் பொன்பரப்பின ஈசுவரமுடைய நாயநார் என்னும் இச்சிவன் கோயிலுக்கு நிமந்தங்களுக்கும், திருப்பணிக்குமாக இறையிலியாக 1 12 வேலி நிலம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர்>வேப்பந்தட்டை>பில்லங்குளம்
பெரம்பலூர் இக்கல்வெட்டில் பொன்பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் என்னும் இவ்வூர்ச் சிவன் கோயிலுக்குக் கூகையூருடையான் என்பவன் இக்குளத்தை தேவதான இறையிலியாக அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்>வேப்பந்தட்டை>தழுதாழை
பெரம்பலூர் செம்பை நாயகன் கன்மியான ஆறகளூர் வேளான் ஆதித்த நீலன் என்பான் மகதை நாடாழ்வான் செம்பை நாயகனுக்கு நன்றாகத் தழுதாழை இறைவனுக்கு தேவதானமாக நிலம் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூர்>வேப்பந்தட்டை>தழுதாழை
பெரம்பலூர் மூன்றாம் இராஜராஜனின் 23-ஆம் ஆட்சியாண்டில் மிலாடாகிய ஜந்நாத வளநாட்டு வெம்பார் கூற்றத்துத் தழுதாழை உடையார் வடகயிலாயமுடைய நாயனார்க்கு செம்பையாழ்வார் இராஜராஜ தேவரான வாணகோவரையன் என்பான் இறையிலியாக நிலமளித்த செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.