Koththavasal village. Perambalur Tk. Engraved on a separate stone lying in the compound of Chockanatta temple. Rajendra chola I. Regnal year. 3. 1015 AD. Tamil. Records the endowment of two ma extent of land to the temple by the Sabha. Parantaka chaturvethimangalam, a Taniyur is also mentioned.எழுத்துகள் (முற்பகுதி) தேய்ந்துள்ளன. முதலாம் இராஜேந்திர சோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது. கொற்றவாயில் இறைவனுக்கு இவ்வூர்ச் சபை இரண்டு மாநிலம் வழங்கிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. வடகரை ராஜேந்திரசிங்க வளநாட்டுத் தனியூர் ஸ்ரீபிராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
Same Place. Same wall of the same temple. Later Pandya. Jatavarman Sundara pandya I, regnal year 10, 13 C. A. D. The previous donation of the village Nocchiyam was again confirmed by the king for his birth day celebration on the swathi star day.பெரம்பலூர் கோபால கூத்த விண்ணகரப் பெருமாளுக்கு திருநந்தவனப்புறமாக இறையிலியாய் முன்பு கொடுத்த கொடையை அரசன் மீண்டும் தன்பிறந்த நாளான சோதித் திருநாளில் விழா கொண்டாடுவதற்காக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
-நல்ல வரலாற்று செய்தியைக் கூறுகின்ற ஒரு கல்வெட்டின் பகுதியாக இத்துண்டுக் கல்வெட்டு காணப்படுகின்றது. கூன்பாண்டியன், பூதப்பாண்டியன் ஆகியோர் பெயர்கள் காணப்படுகின்றன. மும்முடிசோழநல்லூரில் ஒரு எதிரி விரட்டப்பட்ட செய்தியும் அறியக் கிடைக்கின்றது. இறைவனது பெயர் கொழுந்து குலமாணிக்க முடையார் என்று குறிக்கப்பட்டிருக்கலாம். அப்பகுதி சிதைந்துள்ளது.
-இவ்வூர்க் கல்வெட்டுகள் 1912-ஆம் ஆண்டு படியெடுக்கப்பட்டு 22 கல்வெட்டுகளின் குறிப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் 1979-ல் இத்துறையினரால் படியெடுக்கப் பட்டபோது அனைத்துமே சிதைக்கப்பட்டு ஏறத்தாழ 100 துண்டுக் கல்வெட்டுகளாக இருந்தன. ஒரு துண்டுக் கல்வெட்டில் (VI) இறைவனின் பெயர் குணவதீஸ்வரமுடையார் என்று குறிக்கப்படுகிறது. சில துண்டுக் கல்வெட்டுகளில் சாத்தன் கணபதி, அரிகண்டன், நாரணன், வடுகநாதன் போன்ற பெயர்களும், இவர்கள் கொடுத்த தளிகைப் பாத்திரங்கள் 20 பலம் எடையுடையன என்பதும் தெரியவருகின்றது. மற்றொரு துண்டுக் கல்வெட்டில் (IX) முதலாம் இராஜராஜசோழனின் மெய்க்கீர்த்திப் பகுதியும், கணபதியாரின் அமுது படிக்காக அவர் பேரால் நிலம் வாங்கி அளிக்கப்பட்டமையும் குறிக்கப்பட்டுள்ளது. பிற துண்டுக் கல்வெட்டுகளில் முறையே ஆறிடுபடுகை மயக்கல் நிலம் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன கைத்தீட்டு, செலவோலை போன்ற ஆவணங்களைக் குறிக்கும் சொற்களும் காணப்படுகின்றன. ஒரு துண்டுக் கல்வெட்டில் (XIII) கோட்டூர் என்று இவ்வூரின் பெயர் குறிக்கப்படுகிறது. இருப்பினும் இவ்வூர் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள போதியனவாக கல்வெட்டு வரிகள் இல்லை.
-ராஜேந்திரசோழ வளநாட்டு நகரமாகிய செயங்கொண்ட சோழபுரத்து நகரத்தார்களும் ராஜேந்திரசோழ பேரிளமை நாட்டாரும் இசைந்து கூடி பேசி முடிவெடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. அம்முடிவாவது திருத்துறை நாயனார் கோயிலுக்கு காலை பூசைக்கும் திருப்பணிக்கும் வேண்டிய செலவினங்களுக்கு இறையிலியாக நிலம் வழங்கியமையாகும். நகரத்தார் பணிக்க இவ்வாவணத்தை எழுதியவன் நகரக் கணக்கு என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளது.
-அரும்பாக்கிழையான் சுந்தரன் என்பவன் இக்கோயில் இறைவனுக்குத் திருவமுது படைப்பதற்கு நிவந்தமளித்துள்ளான். இக்கோயிலைச் சேர்ந்த இருவர் தினமும் இருநாழி அரிசி கொண்டு திருவமுது படைப்பதாக உறுதியளித்துள்ளனர். இருநாழி அரிசியை பலகையில் அளந்ததாகக் குறிப்பிடுகிறது இக்கல்வெட்டு. கல்வெட்டு உள்ள கோயில் சிதைந்து அதிட்டானப் பகுதி மட்டுமே உடையதாக உள்ளது.
-கோயிலுக்கு நிலக்கொடையளித்த செய்தியையும் இறைவனுக்கு வழிபாட்டின் போது மூன்று சந்தியிலும் தண்ணீரால் அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தது பற்றியும் இத்துண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன.
-இவ்வூர் திருவிராமீசுவரமுடையார்க் கோயிலுக்கு திருநொத்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு திசை விளக்கு சோழ மூவேந்த வேளான் என்பவர் திருவிளக்குப் புறமாக மாகாணி நிலம் தானமளித்துள்ளார். இறை [வரி] செலுத்தும் இந்நிலத்தைத் தாங்கள் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக இறையிலி நிலத்தை [வரியில்லாத நிலம்] கோயிலுக்கு அவ்வூர் சபையார் அளித்ததை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
-திருவிராமேஸ்வரமுடையார்க் கோயிலில் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கும் திரிபுவனசுந்தரர் என்னும் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கும் நிலக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
-தஞ்சாவூர் வீரசோழப்பெருந்தெருவைச் சேர்ந்த வியாபாரி ஊரன் பிரம்மபட்டன் என்பவன் திருவிராமேஸ்வரமுடையார்க் கோயிலுக்கு தினமும் ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு 15 கழஞ்சு பொன்னும் 48 குழி நிலமும் அளித்தான். இந்நிலத்தையும் பொன்னையும் இக்கோயிலைச் சேர்ந்த நால்வர் பெற்றுக் கொண்டு, இந்நிலத்தின் போகத்தாலும் இப்பொன்னின் வட்டியாலும் இக்கோயில் இறைவனுச்கு ஒரு நொந்தா விளக்கு எரிப்பதாகச் சம்மதித்துக் கல்வெட்டிக் கொடுத்திருக்கின்றனர்.
-இவ்வூர் மதனமஞ்சரிச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட நென்மலி நாட்டில் அமைந்திருந்தது. இந்நாட்டிலுள்ள பருத்திக்குடி என்ற ஊரைச் சேர்ந்த கோதுகுலவன் வீரசோழன் என்பவனிடமிருந்து பெற்ற காசுக்கு சேர்ந்த வட்டியை கொண்டு கால் செய் நிலத்திற்கு இறைவரி நீக்கம் செய்து கொடுக்கப்பட்டது. அவ்வாறு வந்த வட்டி ஆண்டுக்கு 3 காசாகும். இந்த காசு கொண்டு இறையிலி செய்யப்பட்ட அந்நிலத்தின் வருமானத்தால் இக்கோயில் இறைவனான மகா தேவருக்கு அபிஷேகம் செய்ய பிராமணனுக்கு தினந்தோறும் பதக்கு நெல் கொடுக்கப்பட்டது. இந்நிலம் தொடர்பான, வாசலில் போந்த குடிமை, ஊரிடு வரிப்பாடு முதலிய வரிகளை சபையோரே செலுத்துவதாகவும் முடிவு செய்தனர். இப்பிராமண ஊரில் 46, 47 என்ற எண்ணிக்கையில் குடிசார்ந்த நிலப்பிரிவுகள் (குடும்பு) இருந்தன.
-இக்கல்வெட்டு மூன்றாம் இராஜராஜசோழன் அல்லது மூன்றாம் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. இறைவனுக்கு அரிசி அமுது, அன்னக்கறி அமுது. விஞ்சனம் உள்ளிட்டவை படைப்பதற்கும், சந்தி விளக்கு எரிப்பதற்கும் குறிப்பிட்ட இருவர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த ஏற்பாட்டைக் கூறுகிற இச்செய்தியை அக்கோயிலான திருவிடைக்காட்டு பிரான்தகர் கோயிலில் கல்லிலே வெட்டவும் சொல்லியிருக்கின்றனர். மேற்கூறிய நிவந்தமளித்த நபர்களின் பெயர்களை தெரிந்துகொள்ள இயலாதவாறு மிகவும் சிதைந்துள்ளது.
-மிகவும் சிதைந்த கல்வெட்டு. சேந்தமங்கலமுடையான் வேளான் எதிரிலிப் பெருமாளான இருங்கோளன் என்பவனை முதுகண்ணாக [பிரதிநிதியாக) உடைய வேளான் கருணாகரன் என்பவன். இவ்வூர் கோயிலுக்கு ஒரு நிலத்தை நீர் வார்த்து தானமாக அளித்துள்ளான். இந்நிலம் கொண்டு இறைவனுக்கு தினந்தோறும் பிரசாதம் படைக்க வேண்டும். மேலும் அப்பிரசாதத்தில் இவ்வூர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இருநாழி அரிசிப் பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்தானத்தைச் செய்துள்ளார்.
-மிகவும் சிதைந்த கல்வெட்டு. இக்கோயிலில் இறைவனுக்கும் நம்பிராட்டியார்க்கும் விஸ்வசேனர்க்கும் சிலை எடுக்கப்பட்டது. இச்சிலைகளை எடுத்தவர் பெயரை அறிந்து கொள்ள முடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்த தெய்வங்களுக்கு அமுது படைப்பதற்காக நெல் வழங்கப்பட்டது. இந்நெல்லை இக்கோயிலைச் சேர்ந்த சிலர் பெற்றுக் கொண்டு அதற்கான ஆண்டு வட்டியில் அமுது படைத்தனர். விஷூ, அயன, செங்கிராந்தி நாட்களில் அமுது படைப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. வெற்றிலை, பாக்கு, மிளகு, அரிசி, பால், தயிர், விறகு உள்ளிட்ட பொருட்களுக்கு இணையான நெல் எவ்வளவு என்ற விவரம் கூறப்பட்டுள்ளது.
-சேந்தமங்கலம் என்ற இந்த ஊர் இராஜேந்திர சோழ வளகாட்டு நெனமலி நாட்டில் அமைந்திருந்தது. இங்குள்ள பெருமாள் கோயில் இறைவனின் பெயர் கருமாணிக்க விண்ணகர் எம்பெருமாள் என்பது. இவ்வூரைச் சேர்ந்த சிலரிடமிருந்து வீரசிகாமணி விழுப்பரையன் என்பவன் 500 காசுக்கு நிலம் விலைக்கு வாங்கிய செய்தியும் அந்நிலம் இக்கோயிலுக்கு விளக்கெரிக்கும் பொருட்டு தானமாக அளிக்கப்பட்ட தென்றும் தெரிய வருகிறது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. இந்த ஆவணம் நியோக பத்திரம் என்ற வகையினைச் சேர்ந்தது என்பதும் தெரிய வருகிறது.
-குறுப்பனாங்குடி இறைவனாகிய கூனாண்ட மாதேவற்கு ஸ்ரீகோயில் திருமுற்றம், திருமடைவிளாகம் ஆகியவற்றிற்கு தேவதானம் நிலம் விலைக்கு வாங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலம் தலைகுலமுடையானிடமிருந்து 1500 காசுகளுக்கு திருநாமத்துக் காணியாக விலைக்கு வாங்கப்பட்டதாகும்.
-பேரம்பலம் ஷிபான் மேய்ந்த ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர் என்று அரசனின் சிறப்புப் பெயர் காணப்படுகிறது. கல்வெட்டின் உட்பகுதியில் பெரியதேவர் குலோத்துங்க சோழதேவர் என்ற குறிப்பும் உள்ளது. மங்கல நாட்டில் மங்கலம் என்ற ஸ்ரீஇராசேந்திர சதுர்வேதி மங்கலத்திலுள்ள கோயிலின் தேவதான இறையிலி நிலங்கள் குறிக்கப்படுகின்றன. ஊர்க் கணக்குப்படி தேவதான இறையிலி நிலங்கள் தளியாகப் பிரித்து பழைய பெயர் நீக்கப்பட்டுக் குலோத்துங்க சோழமங்கலம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதை அறியமுடிகிறது.