Skip to main content

1146 results found

காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கல்வெட்டுச் சேதமடைந்துள்ளது. அருமொழிதேவ வளநாட்டு, அளநாட்டு கொழவாய் மங்கலத்து ஊர்த்தலைவன் ஐய்யந் செட்டியார் மகள் செட்டி ராஜமாணிக்கத்தார் எனும் நுளம்பமாதேவியார் என்பவள் திருவத்தியூர் ஆழ்வாருக்கு விளக்கெரிக்க 96 ஆடுகள் தானமளித்துள்ளாள். மேலும் இறைவனுக்கு காதணி (திருவாளி) தானமளித்துள்ளாள். இவளது முழுப்பெயர் ஜெயங்கொண்ட சோழவீர நுளம்பமாதேவியாராந செட்டி ராஜமாணிக்கத்தார் என்பதாகும். இவள், நிலங்குடிதாங்கியாரான ஜயங்கொண்ட சோழ வீரநுளம்பரின் மனைவியாவாள்.
செங்கல்பட்டு>தாம்பரம்>மாடம்பாக்கம்
செங்கல்பட்டு இவ்வூர் சிற்றெரி உடைய நாயனார் கோயிலுக்குத் திருவிளக்குகள், அமுதுபடி, திருநாள் உபயங்கள் போன்றவற்றிற்குத் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அச்செலவுகளுக்கு போதவில்லையாதலால், கோப்பெருஞ்சிங்கதேவரின் 12-வது ஆட்சியாண்டில் இவ்வூரின் வடகூறில் நீர்நிலம் கொல்லைநிலம், மனைகள், மனைப்படைப்பைகள் உள்பட மூவாயிரம் குழி நிலமும் திருநாமத்துக்காணியாக மகாசபையார் பிரமாணம் பண்ணிக் கொடுத்தனர்.
இந்நிலத்தில் மகாசபையோரே வேண்டும் பயிர் செய்து கொண்டு சில வரிகளையும் தாங்களே செலுத்தி இறையிலி செய்வதாகவும் கூறியதுடன் தங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விற்க வேண்டிய சூழல் ஏற்படுமாயின் இக்கோயில் பண்டாரத்துக்கே விற்கக் கடவோம் என்றும் உறுதியளித்துள்ளனர். அதன்படி இப்போது கோயிலில் கல்வெட்டிக் கொடுத்தோம் என்று மஹாஸபையார் தெரிவித் துள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் கொடுக்கப்பட்ட மேற்கூறிய நிலங்களும் மனைகளும் பற்றிய ஆவணம் கல்லில் வெட்டப்படாமல் இருந்ததால் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
செங்கல்பட்டு>தாம்பரம்>மாடம்பாக்கம்
செங்கல்பட்டு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு நெடுங்குன்றநாட்டு மாடம்பாக்கமான உலகுய்ய வந்த சோழச் சதுர்வேதி மங்கலத்து வாரியனும் கரணத்தானும் சிற்றேரி ஆளுடைய நாயனார்க்கு உபயமாகப் பெற்ற அவ்வூரின் வடகூறு 20 வேலி நிலத்தினைப் பதிவு செய்துள்ளனர். பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் என்ற சிற்றரசன் இதற்கான தான உத்தரவில் ஒப்பமிட்டுள்ளான். இந்நிலத்தில் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளைப் பங்குனித் திருநாளுக்கும் திருப்பணிக்கும் முதலாக (உடலாக) இவன் அளித்துள்ளான். ஏற்கெனவே உள்ள தேவதானம், திருவிடையாட்டம், பிடாரி இறையிலி, மடப்புறம், சித்திரமேழிப்பெரியநாட்டார் பட்டியார் பிள்ளைகள் குடியிருப்பான நத்தம் நீக்கி, எஞ்சிய நன்செய், புன்செய், நத்தம் உட்பட வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு>மதுராந்தகம்>பழனையூர்
செங்கல்பட்டு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர்மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து வடபிடாகை பழனையூர் உடையார் திருமாகாள முடையார்க்கு ஸ்ரீபலிக்கும் திருநந்தவனத்துக்கும் இவ்வூர் மஹாஸபையார் இறையிலியாக நிலம் விட்டதையும், அதன் அளவுகள் மற்றும் எல்லைகளையும் குறிக்கிறது.
காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>வயலக்காவூர்
காஞ்சிபுரம் ஸ்ரீவாரணாதீசுவரமுடையார் கோயிலில் திருமண்டபம், திருக் கற்றளி செய்வித்துக் கோட்டத்தில் தேவர்களையும் [இறை உருவங்கள்] எழுந்தருளுவித்தவர் திருக்காளத்தி உடையான் வாரணாசி உடையான் களப்பாளன் என்பவராக இருத்தல் வேண்டும். இவர் தன் மகள் ஆளுடை நாச்சிக்காக ஒரு சந்தி விளக்கு இக்கோயிலில் எரிப்பதற்குக் கண்டகோபாலன் புதுமாடை ஒன்றை அளித்தார். இக்காசைப் பெற்றுக் கொண்ட அக்கோயில் சிவபிராமணர்கள் விளக்கெரிக்கச் சம்மதித்த செய்தியும் கையெழுத்திட் டுள்ளமையும் தெரியவருகிறது.
காஞ்சிபுரம்>உத்திரமேரூர்>வயலக்காவூர்
காஞ்சிபுரம் வயலைக்காவூர் ஸ்ரீவாரணாதீசுவரர் கோயில் இறைவனுக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு இவ்வூர்க் கண்ணந்தைக் காவிதி காரியாழ்வான் என்பவர் உபயமாக அளித்த கண்ட கோபாலன் புதுமாடை ஒன்றை, இக்கோயில் சிவபிராமணர்கள் சிலர் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்க சம்மதித்து கையெழுத்திட்டுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>நென்மேலி
செங்கல்பட்டு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு கீழ்க்கொடு நென்மலியான புண்டரிக நல்லூர் அவிமுக்தீசுவரமுடையார் கோயில் இறைவனுக்குக் களத்தூர் தமிழதரையன் உத்தமன் திருச்சிற்றம்பலமுடையான் என்பவன் பல நிமந்தங்களுக்கும் மடைவிளாகத்திற்கும் அவரது காணியான புண்டரிக நல்லூரில் பலதானங்கள் செய்துள்ளார். அவையாவன: புண்டரிக நல்லூரில் ஆயிரத்தறு நூறுகுழி ஓர் இடத்திலும் அதே ஊரில் காடுவெட்டி கட்டை பறித்துத் திருத்தின நிலம் கமுகந் தோட்டம், கமுகந்தோட்டத்தில் கிழக்கில் ஒருகுழி நிலம், திட்டைச்செறு நூற்றுநாற்பது குழி மற்றோர் நிலம் மற்றும் திருநுந்தா விளக்கு இரண்டு.
செங்கல்பட்டு>வண்டலூர்>மண்ணிவாக்கம்
செங்கல்பட்டு இம்மடிநரசிங்கராயர் காரியத்துக்குக் கர்த்தரான தெக்ஷிணா சமுத்திராதிபதிசுவாமி நரசநாயக்கர் உடையார் காரியத்துக்குக் கர்த்தரான பொப்பயராசாவின் குமாரர் கொப்பயிராசா இப்பகுதியை நாயக்கதனம் செய்து வந்துள்ளார். அப்போது பெரிய குப்பய்யரும் சிறுதம்பயரும் முன்னாள் பூர்வத்தில் இறைவன் அமுது செய்து அருளின நிலங்கள் மண்ணீசுவரமுடையார் கோயிலுக்கு வழங்கியிருந்தனர். இவ்வமுதுபடியுடன் மூன்று சந்தி விளக்குக் கும் கார்த்திகை அமுதுபடிக்கும் மேலும் நிலங்கள் வழங்கப்பட்டவிவரத்தை இக்கல்வெட்டுச் சுட்டுகிறது. பல்வேறு நிலங்களின் பெயர்களும் அளவுகளும் கூறப்பட்டுள்ளன. இறைவன் பெயர் மண்ணீசுவரமுடையார் என அழைக்கப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு>செங்கல்பட்டு>திருவடிசூலம்
செங்கல்பட்டு கல்வெட்டின் கடைசி பகுதி உயர்த்தப்பட்ட தரைத்தளத்தினுள் மறைந் துள்ளது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லநாட்டு திருவிடைச்சுரமுடையார் கோயில் வளாகத்தில் விக்கிரமசோழன் காலத்தில் விக்ரம சோழீஸ்வரமுடையார் என்ற கோயில் எடுக்கப்பட்டு அக்கோயில் இறைவனுக்கு வேண்டும் நித்த நிமந்தங்களுக்காக களத்துர்க் கோட்டத்து உறோடக நாட்டுத் தண்டுறை என்ற ஊரில் நிலக்கொடை அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அச் செய்தியைக் கூறவரும் பகுதிகள் மறைந்துவிட்டன.
செங்கல்பட்டு>செங்கல்பட்டு>திருவடிசூலம்
செங்கல்பட்டு கல்வெட்டின் தொடக்கமும் இறுதியில் சில வரிகளும் கட்டடப் பகுதிக்குள் மறைந்துவிட்டன. திருவிடைச்சுரமுடையார் கோயில் தேவரடியாள் செல்வப் பிள்ளை என்பவளுடைய மகள் நம்பியாழ்வியான திருஞானசம்பந்த மாணிக்கம் என்பவள் இக்கோயில் இறைவனையும் இறைவியையும் நடம் செய்கின்றவர்களாகப் பத்மபீடத்தில் அமைத்து அலங்கார பீடமும் செய்வித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
செங்கல்பட்டு>செங்கல்பட்டு>திருவடிசூலம்
செங்கல்பட்டு அச்சுத தேவமகாராயர் தொண்டை மண்டல செங்கழுநீர்ப்பட்டுச் சீர்மைக்கு மகா மண்டலேஸ்வரராகத் திருமலை தேவமகாராயர் என்பவரை நியமித்து அப்பகுதி முழுவதையும் அவர் பொறுப்பில் அளித்திருந்ததால், அப்பகுதியில் வரிவசூலிக்கும் உரிமையையும் பெற்றிருந்தார். அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடக் கோன், நயினான்கோன் உள்ளிட்ட பலர் புல்வரி சாதம், இடைத்துறை சாதம் போன்ற வரிகளைச் செலுத்தி வந்தனர். அந்த வரிகளைத் திருமலைதேவ மகாராஜா, அரசன் அச்சுததேவ மகாராஜாவிற்குப் புண்ணயமாக (நலனுக்காக) திருவிடைச்சுரமுடையார் கோயிலில் நடுவறியும் தம்பிரான் என்ற இறைவர்க்கு தினமும் நைவேத்தியம் திருவிளக்கு ஆகியவற்றிற்கு அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு>செங்கல்பட்டு>திருவடிசூலம்
செங்கல்பட்டு களத்தூர்க்கோட்டத்து வல்லநாட்டுப் பெருந்தோபாக்கமும் ஆமூர் கோட்டத்துப் பெருந்தோபாக்கமும் நீர் நிலமும் கொல்லை நிலமும் இறையிலியாக விடப்பட்டன. அதனைப் பதிவு செய்யுமாறு திருவிடைச்சுரமுடையார் கோயில் தேவகன்மி, கோயில் கணக்கு, சிரி மாஹேஸ்வர கண்காணி போன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் துண்டுக் கல்வெட்டு. நிலங்களின் எல்லை சொல்லப்படுகிறது. நிலங்கள் வரி நீக்கி இறையிலியாகத் தரப்பட்டமையும் அறியப்படுகிறது.
காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்>காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காஞ்சிநகரில் இரவிகுலமாணிக்கப் பெருந்தெருவில் வாழ்ந்த சாலிகன் சன்திறவன் மலைகுனிய நின்றான் அத்தியூராழ்வானான நியாயபாலன் என்பவன் திருவூரகத்து எம்பெருமானுக்கு ஸொம்பாதி விளைநிலம் திருத்த 200 புதுக்காசு வழங்கியதுடன் இறைவனுக்குத் திருப்போனகம் செய்வதற்கும் நிலக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு>மதுராந்தகம்>புலிப்பரக் கோயில்
செங்கல்பட்டு இவ்வூர் புலிப்பகவ நாயனார் கோயிலின் திருநாமத்துக் காணி ஊரான சேதிராய நல்லூரில் வசூலிக்கப்படும் வரிகளான தானிய வர்க்கம், பழவரி, புதுவரி போன்ற சமுதாய பிராப்திகள் அனைத்தையும் இக்கோயில் திருப்பள்ளி எழுச்சி, குறை வறுப்பு, அடுமாத்து பூசை திருப்பணி போன்றவற்றிற்கு தேவதான இறையிலியாக அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு>மதுராந்தகம்>புலிப்பரக் கோயில்
செங்கல்பட்டு ஜயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து ஸ்ரீமதுராந்தக சதுர்வேதி மங்கலத்து வடபிடாகையான மாத்தூரில் உள்ள உடையார் திருப்புலி பகவ நாயனார் கோயில் திருமடை வளாகத்தின் நான் கெல்லையிலுமுள்ள கைக்கோளர், சாலியர், வாணிகர், கோயிலங்காடி, சேனையங்காடி மற்றும் அனைத்து புறக் கலனைகள் உட்பட முன்பு உள்ள குடிகளும் பின்னர் குடியேறும் குடிகளையும் ஏற்றிக் கொண்டு அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பல வரிகளும் பல உபாதிகளும் இக்கோயில் பூசைக்கும் திருப்பணிக்கும் திருநாமச் சிறப்புக்கும் சர்வமானியமாக இறையிலி செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>நெரும்பூர்
செங்கல்பட்டு துண்டுக் கல்வெட்டு. மதுராந்தக நல்லூர் என்ற ஊர்ப்பெயரும் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் தேவதான இறையிலி நிலம் வழங்கப்பட்ட விவரமும் அறிகிறோம்.
செங்கல்பட்டு>திருக்கழுக்குன்றம்>நெரும்பூர்
செங்கல்பட்டு நெருமூரான மதுராந்தக நல்லூர் திருவான்மீசுவரமுடைய மகாதேவர்க்கு வேட்டக்குடியான் புலியதேவன் என்பவர் இவ்வூரிலும் சூளாமணி மங்கலத்திலும் இறையிழிச்சு விழாப்புறமாகி நிலம் வழங்கியுள்ளார். நிலத்தின் பெயர் திருவாய்ப்பாடி செறு என்று அறிகிறோம். நெருமூர் நாட்டு மூவேந்த வேளான் உள்படப் பலர் கையொப்பமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>மாகறல்
காஞ்சிபுரம் திருவகதீஸ்வரமுடையார் திருமடை வளாகமான பெரும்பற்றப்புலியூரில் இறைவன் எழுந்தருளியிருக்கும்போது வழிபட்டு மன்னன் இரண்டாம் குலோத்துங்கன் பல இடங்களில் உள்ள நஞ்சை புஞ்சை நிலங்களை இறையிலி தேவதானமாக வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்>வாலாஜாபாத்>மாகறல்
காஞ்சிபுரம் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்ற இந்த ஊரிலுள்ள சிவன் கோயில் திருவகத்தீசுரமுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு எயிற்கோட்டத்திலுள்ள இருமரம் என்ற குலோத்துங்க சோழ நல்லூரில் விளைநிலம் ஏரி நிலம் போன்ற 40 வேலி நிலமும் காலியூர்க் கோட்டத்திலுள்ள வெண்கற்சேரியில் 304 நிலமும் நத்தங்கொல்லை 11 வேலியும் முன்னர் தேவதானமாக இருந்தன. பழந்தேவதானமாகிய இந்நிலங்கள் மீண்டும் இக்கோயிலுக்கு இறையிலி தேவதானமாக வேண்டுமென்றும், இத்தேவதான நிலங்கள் காலிங்கராயர் என்பவருக்குப் பற்றாய் ஆக வேண்டும் எனவும் நந்திவன்மர் என்ற அதிகாரி ஆணையிட்டார். அந்த ஆணையைத் திருமந்திர ஓலை இராசநாராயண மூவேந்த வேளான் எழுதப் பல அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலங்களைப் பயிர் செய்யும் பொறுப்பு காலிங்கராயர் என்பவருக்கு அளிக்கப்பட்டதை பற்றாய் நிற்கவும் எனக் கூறப்பட்டுள்ளது.