விழுப்புரம்திருநன்தீசுரமுடைய தேவர் என்ற இறைவன் பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி ஒரு துண்டுக்கல்வெட்டில் உள்ளது. ஊரின் பெயர் வயிரமேகபுரமான ஜனநாதநல்லூர் என்ற குறிப்பும் உள்ளது.
விழுப்புரம்கோயிலின் சுற்றுத் தரைப்பகுதி பிற்காலத்தில் உயர்த்திக் கட்டப்பட்டதால் கல்வெட்டின் தொடர்ச்சி விடுபட்டுள்ளது. மனக்கானத்து இராஜராஜ பேரளத்து பூமீஸ்வரத்து இறைவனுக்கு ஒரு உப்பளத்துக் குடிகளும் கண்காணிப்பாளரான இராமன்குமரன் சோழமூவேந்தவேளாரும் விளக்கெரிக்க அளத்துக்கு ஒரு காசு வீதம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட அளத்தின் நான்கு எல்லைகளில் அமைந்த உப்பளங்களின் பெயர்களும் அளங்களுக்கு நீர்பாய்ந்த பெருவாய்க்காலும் சொல்லப்பட்டுள்ளது.
விழுப்புரம்துண்டுக் கல்வெட்டு. கோயில் மடவளாகத்திலிருக்கும் நெசவாளர்களான கைக்கோளர்க்கு காணி உரிமை இறைவன் பெயரில் விலையாவணம் செய்து கொடுத்த செய்தி உள்ளது.
விழுப்புரம்அகத்தீஸ்வரமுடையார் கோயில் மடைவிளாகத்தில் உள்ள மனைகளை, மனை ஒன்றுக்கு மூன்று பணம் என்று விலைக்கு விற்று அத்தொகையைக் கோயில் திருப்பணி மற்றும் வழிபாடுகளுக்குப் பயன்படுத்த எடுத்த முடிவினை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. தொடக்கத்தில் சண்டேஸ்வரர் குறித்த பாடல் உள்ளதால் இது கோயில் (இறைவன்) பேரில் எடுத்த முடிவு என்றும் தெரிகிறது.
விழுப்புரம்இது மன்னன் பெயர் இல்லாத அரசனின் வாய்மொழி ஆணை. எதிரிலிச் சோழசம்புவரையர்கேட்டுக்கொண்டபடி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சேவூரின் பிடாகையான பூதேரியில் 10 வேலி நிலம் தேவதான இறையிலியாக வரி நீக்கிக் கொடுக்கப்பட்டது. சேவூரான ஸ்ரீகரணநல்லூர் திருவகத்தீஸ்வரமுடையார் கோயில் தேவகன்மிகள், மாகேஸ்வரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோர் முன்னிலையில் இறையிலியாகத் தந்த முடிவு நிறைவேற்றப்பட்டது. அரசு அதிகாரிகளான வரிக்கூறு செய்வார், வரியிலார், திருமந்திர ஓலை ஆகியோர் ஆணையை நிறைவேற்றிய நடைமுறையில் குறிக்கப்படுகின்றனர். அடுத்த இராஜாதிராஜன் கல்வெட்டிலும் இந்த எதிரிலிச் சோழசம்புவரையர்குறிக்கப்படுவதால் இக்கல்வெட்டு இராஜாதிராஜன் காலத்தியது எனலாம்.
விழுப்புரம்கொடியத்தைச் சேர்ந்த குடிபள்ளி மாமலன் என்பவரது 6 வயது மகன் கற்றளி என்ற சிறுவன் அரிவாளால் மரத்தை வெட்டியபோது செங்கீரைப்பாக்கத்தைச் சேர்ந்த குடிபள்ளி பொன் என்பவரது 7 வயதுடைய ஆமூர் நக்கன் என்ற சிறுவன் கையை நீட்ட, கையில் அரிவாள்பட்டு இறந்து போனான். இந்த பாவம் (பிரமாதம்) தீர்வதற்காக முன்னவன் தந்தை மாமலன் கிடங்கில் இறையான் கோயில் இறைவனுக்கு 12 நந்தா விளக்கு எரிக்க 45 ஆடு கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
விழுப்புரம்ஒரு பழையக் கல்வெட்டினைப் படியெடுத்து சோபானத்தில் வெட்டியதன் நகல் இது. செங்கேனி சாத்தன் நாலாயிரவனான கரிகாலச் செங்கேணி நாடாழ்வான் தான் எழுந்தருளுவித்த சித்திரமேழி விடங்கர் என்னும் நடராஜருக்கு நித்திய வழிபாட்டிற்காக ஆலப்பாக்கம் என்ற ஊரினை விலைக்குப் பெற்று இறையிலியாகக் கொடுத்துள்ளார். இதன் நான்கு எல்லைகள் சொல்லப்படுகின்றன. வழிபாட்டிற்கு வேண்டிய பொருள்களும், அவற்றிற்கு இணையான நெல்லும் பட்டியலிட்டுச் சொல்லப்பட்டுள்ளன.
விழுப்புரம்கந்தாடு உடையார் தாதகை நாயகர் திருவாய் மொழிந்தருளினபடி சண்டேஸ்வரர் ஆணை குறித்த பாடலுடன் இக் கல்வெட்டு தொடங்குகிறது. சண்டேஸ்வரர் பெயரில் ஓலை (ஆணை) வழங்கப்பட்டு இக்கோயிலைச் சேர்ந்த தர்மதாவளத்து கைக்கோளன் அப்பனாயன் (தண்டமாராயன்) என்பவர் கோயிலில் திருகதிர்வேள் பிள்ளையாரை (முருகன்) அவருடைய உபயமாக பிரிதிஷ்டை செய்துகொள்ள அனுமதித்து அவருக்கு உரிய மரியாதைகள் அளிக்க முறை செய்யப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது. தறிக்கடமை என்ற வரி வருவாயும் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலிலிருந்த மாகேஸ்வரர்கள் சொல்லி சித்திரமேழி பட்டர் என்பவர் இறைவன் பெயரால் இந்த ஆவணம் எழுதியுள்ளார்.
விழுப்புரம்ஊரின்பெயர் அறமிறங்காஒய்மாநாட்டு ஓகந்தூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் திருவீமீஸ்வரமுடையார் கோயில் இறங்கல் மீட்ட நாயனாரின் வழிபாடு மற்றும் திருப்பணிகளுக்காக சிறுநாவலூர் என்ற ஊர் இறைவனது பெயரில் திருநாமத்துக் காணியாக வழங்கப்பட்டு நாடு அமைப்பினரது வரிகள் நீக்கித் தரப்பட்டுள்ளன. ஊரின் நில எல்லைகளில் சூலக்கல்லும் சித்திரமேழியாரின் ஏர், பசும்பை, சதிரமுடி ஆகிய சின்னங்களின் பொறிப்பும் இடப்பட்டு வழங்கப்பட்டமை குறிக்கப்பட்டுள்ளது. சம்புவராயரின் 16 ஆவது ஆட்சியாண்டு முதல் சிறுநாவலூருக்குரிய வரிகளை நாட்டார் ஏற்றுக் கொண்டு வரிவருவாய்களை கோயிலுக்குத் தந்துள்ளனர். நாட்டார் நகரைக் காட்டுப் பற்று நாட்டவர் எனக் குறிப்பிட்டபோதிலும் எல்லைக் கல்லில் சித்திரமேழியினரின் குறியீடுகள் பொறிப்பதால் இவர்கள் சித்திரமேழி பெரிய நாட்டார் என்பது தெளிவு.
விழுப்புரம்ஓகூர் அகத்தீஸ்வரமுடையாருக்கு தேவதான திருநாமத்துக்காணியாக 17 துண்டு (தடி) நிலங்கள் வழங்கப்பட்டுக் கோயிலில் உள்ள சித்திரமேழி விடங்கர்க்கு (செப்புத் திருமேனி) சித்திரைத் திருவிழா, வழிபாடுகள் மற்றும் திருப்பணிச் செலவுகள் செய்ய முதலீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வரிநீக்கி இறையிலியாகத் தரப்பட்டமையால் பல அரசு அலுவலர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
விழுப்புரம்லெக்ஷமணன் என்பவர் ஆற்று வாய்க்காலை குறுக்கே அடைத்து புது வாய்க்கால் அமைத்து ஏரிக்கும் பிற பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் பாயும்படி அமைத்த செய்தி சொல்லப்படுகிறது, நாவிதன் கீழ்வீதி, பருந்தாடி வாய்க்கால், கொங்கராயர், தேவரடியாள், அலைவாய் கந்தர் முதலிய பெயர்களும் காணப்படுகின்றன. இறைவனின் பெயர் எமதங்கீஸ்வரர் என்றுள்ளது. திருவுள்ளச் சிறுமுறிச் சீட்டு சொல்லப்பட்டுள்ளது.
விழுப்புரம்ஜயங்கொண்ட சோழ மண்டலத்து பனையூர் நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதான ஊரான திருவாமாத்தூர் பரமசுவாமிகள் இறைவனுக்கு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து தென்பிடாகை (தெற்கிலுள்ள புறஊர்) ஒழுக்கை ஊரைச் சார்ந்த பேராளன் கற்றளி என்பவன் தனது மனைவி நந்தி பிராமணி என்பாளின் நலன் வேண்டி திருநந்தா விளக்கு ஒன்று வைத்துள்ளான்.
விழுப்புரம்கொண்டம நாயக்க அய்யன் திருவாமாத்தூர் கோயிலுக்கு வருகை தந்து வழிபாட்டு முறைகளைக் கேட்டறிந்தார். இக்கோயிலுக்கு இருபது கிராமங்களின் மூலம் 450 பொன்னும், 2000 கலம் நெல்லும் வழிபாட்டுச் செலவினங்களுக்கு செலவிடப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர். இவையன்றி கூடுதலாக கொண்டம நாயக்கர் தன் சார்பாக 1600 பொன் அளித்து திருவாமாத்தூர் அபிராமீசுவரர் இறைவனுக்கு இவர் பெயரால் விசேடப் பூசை, பங்குனித் திருநாள், கோயில் திருப்பணி ஆகியவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆணை பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம்சூரப்பநாயக்கர் நலன் வேண்டி திருவாமாத்தூர் அழகிய நாயனார் இறைவனுக்குத் திருவாதிரை திருநாள் அன்று நெய் அபிடேகம் செய்வதற்கு வீரப்பன் என்பவர் வழிவகைச் செய்துள்ளார்.
விழுப்புரம்விசயநகர அரசர் அச்சுதயதேவ மகாராசா சார்பாக இராமபட்டர் அய்யன் உத்தரவின் பேரில் சின்னார பிள்ளை என்பவர் திருவாமாத்தூர் அழகிய நாயனார் இறைவனுக்கு வழிபாடு மற்றும் பூசை ஆகியவற்றினை செய்வதற்குத் தேவையான செலவினங்களுக்காக இடையாற்றுப் பற்றில் உள்ள சிற்றாமூர் ஊரினை இறைநீக்கித் தானமாக வழங்கியுள்ளார்.
விழுப்புரம்விசயநகர அரசர் அச்சுதயதேவ மகாராசாவின் சார்பாக ராமாபட்டய்யன் ஆணைப்படி நாராயணப் பிள்ளை என்பவரால் இராஜராஜ வளநாட்டு வாவலூர் நாட்டுத் தனியூர் திருவாமாத்தூர் கோயில் இறைவனுக்குப் பூசை, திருப்பணி, தெத்தியோதனம் மற்றும் அங்கரங்க வைபோகம் பூசை ஆகியவற்றிற்காக சீயநல்லூர் பற்றில் அமைந்துள்ள சூறைப்பட்டு கிராமம் இறை நீக்கித் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்சம்புவராய மன்னன் இராசநாராயணன் திருவாமாத்தூர் கோயில் தானத்தார்க்கு அளித்த ஆணை இது. நாச்சியார் முத்தை வென்ற முறுவலார் கோயிலில் ஏற்படுத்தப்பட்ட இராசநாராயணன் சந்தி வழிபாட்டுச் செலவினங்களுக்காக அழகிய சீயநல்லூர் பற்றில் உள்ள குளத்தூர் என்கிற சோழிங்க நல்லூர் ஊர் நிலங்கள் இறை நீக்கித் தானமளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்நாச்சியார் முத்தை வென்ற முறுவலார் என்ற இக்கோயில் இறைவிக்கு திருநாமத்துக்காணியாக விளங்கிய சோழிங்க நல்லூர் ஆன இராசநாராயண நல்லூர் ஊர் நிலங்களை விட்டலர் ஓபளூநாதர் மற்றும் சிலர் குத்தகையாக விலைப்பிரமாணம் பண்ணிக்கொண்டு ஆண்டு தோறும் உரிய தொகையை பண்டாரத்தில் செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.