தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (அந்துவ-நல்லூர்-ஆலந்துறை 1 results found)
அந்துவ நல்லூர் ஆலந்துறை

காவிரியின் வடகரையில் அமைந்தது புள்ள மங்கை ஆலந்துறை. அந் நதியில் தென்கரையிலும் ஓர் ஆலந்துறை உண்டென்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும். காவிரி யாற்றின் தென் கரையில் அமைந்த திருக்கோயில்களை வழிபடப் போந்த திருஞான சம்பந்தர் திருவாலந்துறை முதலாய தலங்களை வணங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். 19 எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும். 20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்

19. திருஞான சம்பந்தர் புராணம், 342.
20. I. M. P. , Trichinopoly, 371, 374