தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (சேய்நல்லூர் 1 results found)
சேய்நல்லூர்

சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென் கரையில் விளங்கும் சீர்மை வாய்ந்த சிவப் பதிகளுள் ஒன்று சேய் நல்லூர். அசுர வீரனாகிய சூரனை வென்றழிக்கப் போந்த முருகப்பெருமான் மண்ணியாற்றங்கரையில் தங்கி ஈசனார்க்குப் பூசனை இயற்றிய காரணத்தால் அவ்விடம் சேய் நல்லூர் என்று பெயர் பெற்ற தென்பர். 10 அறுபத்து மூன்று சிவனடியார்களுள் சிறப்பாக ஆலயங்களில் வணங்கப்படுகின்ற சண்டேச்சுரர் பிறந்த ஊர் இந்த ஊரே யாகும். அவ்வூரைப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். திருச்சேய் நல்லூர் என்னும் பெயர் இப்பொழுது திருச் செங்கனூர் என மருவி வழங்குகின்றது.
வட ஆர்க்காட்டிலுள்ள சேனூரும் முருகனோடு தொடர்புடையதாகத் தோன்றுகின்றது. முன்னாளில் அவ்வூர் சேய் நல்லூர் என வழங்கிற்று. 11 அப் பெயரே சேனூர் என்று மருவியுள்ளது.

10. ஏந்தும் அயில்வேல் நிலை காட்டி
இமையோர் இகல்வெம் படைகடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர்
மூதூர் செல்வச் சேய்ஞலூர்
என்று சேக்கிழார் கூறியருளினார். (சண்டேசுரர் புராணம், 1)
இப் பதியில் ஆறுமுகப் பெருமான் பூசனை புரிந்து ஈசனிடம் பாசுபதாஸ்திரம் பெற்ற வரலாறு கந்த புராண உற்பத்திக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
11. 394 of 1811.