தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருக்கோவலூர்-வீரட்டம் 1 results found)
திருக்கோவலூர் வீரட்டம்

மற்றொரு வீரட்டானம் திருக்கோவலூர் ஆகும். அது பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ளது. முன்னாளில் சேதி நாடென்றும், மலாடென்றும் பெயர் பெற்றிருந்த நாட்டின் தலைநகரமாகத் திருக் கோவலூர் விளங்கிற்று. 2 பின்னாளில் அவ்வூர் மேலூர் என்றும், கீழுர் என்றும் பிரிவுற்றது. மேலூரே திருக்கோயிலூர் என இன்று வழங்கி வருகின்றது. 3 தேவாரப் பாமாலை பெற்ற வீரட்டானம் கீழுரில் உள்ளது.

2. திருத் தொண்டர்களுள் ஒருவராகிய மெய்ப் பொருள் நாயனார் திருக்கோவலூரில் இருந்து அரசாண்ட குறுநில மன்னர் என்பது திருத்தொண்டர் புராணத்தால் அறியப்படும்.

சேதிநன் னாட்டின் நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரும் மலாடர் கோமான்
என்று அவர் குறிக்கப்படுகின்றார். மலையமான் நாடு மலாடென்றும், அந் நாட்டினர் மலாடர் என்றும், அவர்தம் மன்னர் மெய்ப்பொருள் நாயனார் என்றும் கூறுவர். (திருத்தொண்டர் புராண வுரை, ப. 578. )
3. இப் பாகத்தில் ஆழ்வார்கள் மூவரால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற இடைக்கழி என்னும் பெருமாள் கோயில் இருக்கின்றது.