தமிழகம் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - பழனியப்பா பிரதர்ஸ் (திருநீற்றுச்-சோழ-நல்லூர் 1 results found)
திருநீற்றுச் சோழ நல்லூர்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு என்று திருஞான சம்பந்தர் பாடியருளிய திருநீறு சைவர்கள் அணிந்து போற்றும் சிவ சின்னமாகும். சைவப் பெரு மன்னர் இருவர் தம்மைத் திருநீற்றுச் சோழன் என்று கூறிக்கொள்ள ஆசைப்பட்டார்கள். அவருள் ஒருவன் முதற் குலோத்துங்க சோழன். அம் மன்னன் செங்கற்பட்டைச் சேர்ந்த முன்னலூர் என்னும் ஊருக்குத் திருநீற்றுச் சோழ நல்லூர் என்று பெயரிட்டு, அதனைத் திருசூலத்திலுள்ள சிவாலயத்திற்கு நன்கொடை யாக வழங்கினான் என்று ஒரு சாசனம் கூறும். 6
இரண்டாம் குலோத்துங்க சோழனும் திருநீற்றுச் சோழன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். அவன் செங்கற்பட்டைச் சேர்ந்த களத்தூரில் உள்ள திரு ஆலக் கோயில் என்னும் சிவாலயத்திற்குக் குலோத்துங்க சோழன் திருநீற்றுச் சோழ நல்லூர் என்ற ஊரைத் தேவ தானமாகக் கொடுத்தான்7
தஞ்சை நாட்டில் திருக்கண்ணபுரத்துக்கு அண்மையில் திருநீற்றுச் சோழபுரம் என்ற ஊர் இருந்ததாகத் தெரிகின்றது. 8 சிதம்பரக் கோயிற் சாசனத்தில் திருநீற்றுச் சோழ மங்கலம் குறிக்கப்படுகின்றது. 9 திருநீறு என்னும் பெயருடைய ஊர் ஒன்று திருப்பாசூர்ச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. திருநீறு என்ற ஊரில் வாழ்ந்த வணிகர், மற்றும் ஒன்பதூர் வணிகருடன் சேர்ந்து, ஓர் ஊரை விலைக்கு வாங்கித் திருப்பாசூர்க் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கிய செய்தியைக் கூறுவது அச் சாசனம். 10

6. 312 of 1901.
7. 3630 1911.
8. 505 of 1922
9. 2800 1913.
10. 120 of 1930. Cholas Vol. II. p. 418.